இந்தியாவில் இரண்டாவது அலைக்கு காரணமான டெல்டா வகை கரோனா, தற்போது டெல்டா ப்ளஸ் ஆக மரபணு மாற்றமடைந்துள்ளது. இது டெல்டா வகையைவிட ஆபத்தானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த டெல்டா ப்ளஸைக் கவலையளிக்கக் கூடிய கரோனா வகையாக மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் 52 பேருக்கு டெல்டா ப்ளஸ் கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், திரிபுரா மாநிலத்தில் 138 பேருக்கு டெல்டா ப்ளஸ் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட 151 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியதில், 138 பேர் டெல்டா ப்ளஸ் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதில் மீதமுள்ள 13 பேரில் 10 பேருக்கு டெல்டா வகை கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதும், 3 பேருக்கு ஆல்ஃபா வகை கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. திரிபுராவின் மேற்கு மாவட்டங்களில் மட்டும் 115 பேருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. திரிபுராவில் தினசரி கரோனா பாதிப்பு சதவீதம் ஐந்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.