கேரளாவில் 105 வயது நிரம்பிய பாட்டி ஒருவர் 7ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் முதியோர் திட்டத்தின் கீழ் ஏராளமான வயதானவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். அங்கு பகீரதமா என்ற பாட்டி, தற்போது அந்த முதியோர் திட்டத்தின் கீழ் படித்து 4ம் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். விரைவில் அவர் 7ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறார். மேலும் இவர் இந்த ஆண்டில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் சிறந்த பெண்களுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விரைவில் தான் 10ம் வகுப்பு தேர்வெழுதுவதை ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவரின் விடாமுயற்சியை அறிந்த பிரதமர் மோடி, அவருடைய மன்கிபாத் நிகழ்ச்சியில் அந்த பாட்டியின் தன்னம்பிக்கை, கல்வியில் அவர் காட்டும் ஆர்வம் முதலியவற்றை பற்றி பெருமையாக பேசியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாட்டி கேரளாவில் வைரல் செய்திகளில் ஒன்றாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.