டெல்லி துவாரகா பகுதியைச் சேர்ந்தவர் பூர்ணிமா பாக்சி(33). இவர், இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் தனியார் விமான நிறுவனத்தில் தரைதள பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது வீட்டில் 10 வயது சிறுமி கடந்த 2 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், அந்த சிறுமியை பூர்ணிமாவும் அவரது கணவரும் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதனால், அந்த சிறுமியின் உடலில் தீயால் சுட்ட காயங்கள் உள்படப் பல காயங்கள் காணப்பட்டன. இதையடுத்து இதை அறிந்த சிறுமியின் உறவினர்கள் தம்பதியின் வீட்டுக்குச் சென்று இது குறித்துக் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வாக்குவாதத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் தம்பதியினரை சிறுமியின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பூர்ணிமா பணிபுரியும் இண்டிகோ விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து நேற்று பதில் அளித்துள்ளார். அதில் அவர், “குறிப்பிட்ட பெண் விமானியைப் பணிப் பட்டியலில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல், அவர் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.