
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 3 நாளில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், சங்கரோது மருத்துவமனையில் நீபா வைரஸ் தாக்கி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 50 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் 2 பேர், அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களது மரணத்துக்கு, நிபா வைரஸ் தாக்கியதே காரணம் என்று தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களில் 10க்கும் மேற்பட்டோர் நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. மேலும் 25க்கும் மேற்பட்டோர் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோழிக்கோடு மாவட்டத்தில் நீபா வைரஸ் பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அந்த மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. இதேபோல், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், மாநில அரசு புதிய உத்தரவை அனுப்பியுள்ளது.
நிபா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளைச்சாவு நிலை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும், மலேஷியாவில் இருந்து நிபா வரைஸ் காய்ச்சல் கோழிக்கோடு பகுதியில் பரவியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சல் கேரள மாநில மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.