கன்னியாகுமரி மாவட்டத்தில் ரத்த பரிசோதனை மையங்கள் அமைக்க அதிமுக எம்.பி.விஜயகுமார் வைத்த கோரிக்கையை புறக்கணித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கிறது. அதிமுக எம்.பி. வைக்கும் கோரிக்கைக்கே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்கிற கோபமும் கன்னியாகுமாரி மாவட்ட அதிமுகவில் எதிரொலிக்கிறது.
மத்திய அரசின், ‘ராஜிவ்காந்தி செண்டர் ஃபார் பயோ டெக்னாலஜி’ மூலமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று முக்கிய இடங்களில் ரத்த பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என தமிழக சுகாதாரதுறைக்கு கடிதம் எழுதியுள்ளார் அதிமுக ராஜ்யசபா எம்.பி. விஜயகுமார்.
குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தக்கலையில் உள்ள மாவட்ட மருத்துவமனை, மார்த்தாண்டத்தில் உள்ள தாலுகா மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் ரத்த பரிசோதனை மையங்கள் அமைப்பதன் மூலம், 419 வகையான மருத்துவ பரிசோதனைகளை செய்து அதனை மத்திய அரசு நிர்ணயித்த தொகையின் அடிப்படையிலேயே பொது மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் தெரிவித்து, மேற்கண்ட இடங்களில் ரத்த பரிசோதனை மையங்கள் அமைப்பதற்கான 700 சதுர அடி அறையை ஒதுக்கி தருமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறார் விஜயகுமார்.
ரத்த பரிசோதனை மையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்துகொள்வதாகவும் சுகாதார துறையிடம் விஜயகுமார் தெரிவித்திருக்கிறார், இதனை தனது கோரிக்கை கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதிமுக எம்.பி.யின் இந்த கோரிக்கையை சுகாதாரத்துறை புறக்கணித்தே வருகிறது.
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து தகுதியான நபர் மூலம் ரத்த மாதிரிகளை பெற்று பொதுமக்களுக்கு வழங்கும் அனுமதியையும் தமிழக அரசிடம் கேட்டுள்ளார் விஜயகுமார். இந்த அனுமதி கோரிக்கையும் புறந்தள்ளப்பட்டு வருகிறது. அதிமுக எம்.பி. தனது சொந்த செலவில் மருத்துவ சேவை செய்ய விரும்பும் கோரிக்கைக்கே இந்த கதி எனில், மற்றவர்களின் கோரிக்கை?” என கேள்வி எழுப்புகின்றனர் கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவினர்.