வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என்று தேர்தல் பறக்கும்படையினருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து நடைபெற்ற அதிரடி சோதனையில் திமுக பிரமுகர்களின் வீடுகளில் இருந்து சாக்குமூட்டைகளிலும், அட்டைப்பெட்டிகளிலும் வார்டு வாரியாக சப்ளை செய்வதற்கு வசதியாக கட்டுக்கட்டாக அடிக்கி வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய பண நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுகவினரால் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து தேர்தல் பறக்கும்படை அளித்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் காட்பாடி காந்திநகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 10.50 லட்சம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள கதிர் ஆனந்தின் கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் சோதனை நடத்தினர். விடுதி அறை அலமாறிகளை உடைத்தும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து துரைமுருகனுக்கு நெருக்கமான முன்னாள் வாணியம்பாடி தேவராஜ் வீட்டிலும், குடியாத்தம் முன்னாள் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இந்த நிலையில் இன்று(1.4.2019) தேர்தல் பறக்கும்படையினருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து அவர்கள் மீண்டும் அளித்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகளால் காட்பாடியில் உள்ள திமுக பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள திமுக பகுதி செயலாளர் சீனிவாசன் வீடு மற்றும் அவரது அக்கா வீட்டில் நடைபெற்ற சோதனையில் 10 கோடி சிக்கியதாக கூறப்படுகிறது. சீனிவாசன் வீட்டில் சாக்குமூட்டைகளிலிலும், அட்டைப்பெட்டிகளிலும் கட்டுக்கட்டாக புத்தம்புதிய பண நோட்டுகள் கைப்பற்றுள்ளன. ஒவ்வொரு வார்டுக்கும் யார் யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்வது என்ற விவரத்துடன் இந்த பணக்கட்டுகள் இருந்ததால் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துரைமுருகனின் உதவியாளர் அஷ்கர் அலி வீடு காட்பாடி கல்புதூரில் உள்ளது. இவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் அட்டைப்பெட்டிகளில் அடிக்கி வைக்கப்பட்டிருந்த 5 கோடி பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து வேலூரில் உள்ள திமுக பிரமுகர்களின் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் பதற்றம் நிலவுவதால் துரைமுருகன் வீட்டில் துணை ராணுவமும் பாதுகாப்பு படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்டுக்கட்டாக கைப்பற்ற பணம் யாருடையது என்று கேட்டு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.