புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. நாராயணசாமி முதல் அமைச்சராக உள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் நியமன எம்எல்ஏக்களாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர். மாநில அரசை கலந்து பேசாமல் தனிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களை எம்எல்ஏக்களாக அங்கீகரிக்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.
இதனிடையே 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 3 பேரும் பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சபாநாயகர் வைத்திலிங்கம் தடை விதித்துள்ளார். இதற்கான கடிதத்தையும் சட்டப்பேரவை செயலாளர் ராயனுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் ஆளுநர் கிரண்பேடி உரையுடன் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை (திங்கள்கிழமை) தொடங்கியது. அப்போது 3 எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வந்தனர். அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காத காவலர்களுடன் எம்.எல்.ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.