மாட்டுத்தீவன ஊழல் விவகாரத்தில் தொடரப்பட்ட நான்காவது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது, அவரது ஆட்சிக்காலத்தில் மாட்டுத் தீவன ஊழலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்குகள் மீதான விசாரணை முடிந்து, ஒன்றன்பின் ஒன்றாக தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை ஏற்கெனவே மூன்று வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றிலுமே லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. அதில் முதல் வழக்கில் 5 ஆண்டுகளும், இரண்டாவது வழக்கில் 3.5 ஆண்டுகளும், மூன்றாவது வழக்கில் 15 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், தும்சா கருவூலத்தில் இருந்து ரூ.3.13கோடி ஊழல் புரிந்தது தொடர்பான நான்காவது வழக்கில், லாலு உட்பட 14 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.