சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஊபா (UAPA) 13 (1) (b) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் திருமுருகன் காந்தி பேசும் போது, பாலஸ்தினத்தில் நடந்த போராட்டம் போல் இங்கும் விரைவில் நடக்கும் என பேசியதாக அவர் மீது ஊபா (UAPA) 13 (1) (b) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை குண்டர் சட்டம், தேசதுரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து வந்த காவல்துறையினர் தற்போது ஊபா சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த ஊபா (UAPA) சட்டமானது தடா, பொடா சட்டங்கள் போன்ற கருப்புச் சட்டமாகும். இச்சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு விசாரணையே இன்றி சிறை வைக்க முடியும். இது சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களை தடுக்கும் சட்டமாகும். 1967-ல் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தில் ஜாமீன் பெற முடியாது, 7 வருடம் தண்டனை தரக்கூடியதாகும்.