இந்தியாவின் ஜி.எஸ்.டி.தான் உலகிலேயே மிகச் சிக்கலான வரிமுறை என உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரிமுறை கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. பலதரப்பினரின் எதிர்ப்புகளைக் கடந்தும் ‘ஒரே தேசம், ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் அதை ஆளும் பா.ஜ.க. அரசு அமலுக்குக் கொண்டுவந்தது. இந்த வரிமுறையில் பல நடைமுறை மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருக்கும் சூழலில், இதுகுறித்து உலகவங்கியும் சமீபத்தில் விமர்சித்துள்ளது.
’உலகளவில் 115 நாடுகளில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையானது நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்தியாவின் ஜி.எஸ்.டி. கூடுதல் வரிவிகிதத்துடனும், அதிக அடுக்குகளுடனும் இருப்பதால் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, மிகவும் சிக்கலான வரிமுறையாக உள்ளது’ என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதேசமயம், ‘மிகச் சிக்கலான இந்த வரிமுறையை ‘0% வரிவிகிதம்’ ஓரளவுக்கு எளிமையாக்குவதாக சொல்லலாம். மேலும், 28% என்பது உலகளவில் இரண்டாவது அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரம்பு. அதுமட்டுமின்றி 5%, 12%, 18% மற்றும் 28% என நான்குவிதமான அடுக்குகள் இருப்பது உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான். இந்த வரிவிதிப்பு முறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் போது பல மாதங்களுக்கு நாட்டின் பொருளாதார செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்பட்டாலும், அதன்மூலம் நீண்டகாலத்திற்கு பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை’ எனவும் உலக வங்கி கூறியுள்ளது.