என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்..? என்ற பாடலைப் போல் என்று தனியும் இந்த கரோனாவின் கோரம்? எனப் பொதுமக்கள் மனதில் நொடிக்கு நொடி கேள்விகளாகவும் அச்சமாகவும் வருகிறது இந்த வரிகள். ஒவ்வொரு நாளும் ஐயாயிரத்திற்கு மேல் தான் அதன் எண்ணிக்கை கூடி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பத்தில் மிகவும் கட்டுக்குள் வைக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாத காலம் கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக இருந்தது. ஆனால் இப்போது இரண்டாவது கட்டமாக கரோனா வைரஸ் வேகமாகப் பரவ தொடங்கி விட்டது.
குறிப்பாக மாநகராட்சி பகுதியில் இந்த வைரஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. ஒவ்வொரு நாளும் 20, 30, 40 என வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையாளர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து மாநகராட்சியில் பணிபுரியும் 140 ஊழியர்கள், மற்றும் மாநகராட்சி கமிஷனர் உதவி கமிஷனர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வந்தது. அதில் மாநகராட்சி ஊழியர்கள் மேலும் நான்கு பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டது. மேலும் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சில நாட்களுக்கு மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
வைரஸ் தொற்று பாதிப்பால் ஏற்கனவே மாவட்டத்தில் மூன்று காவல் நிலையங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.