தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று (12.02.2023) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி சபாநாயகர் அப்பாவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து சட்டப்பேரவையில் உரையாற்ற வரும்படி ஏற்கெனவே முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்று காலை சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்ற உள்ளார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு பேரவையில் வாசிப்பார்.
இந்த உரை முடிந்தவுடன் இன்று பிற்பகல் சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்துவதற்காக எத்தனை நாட்கள் அவையை நடத்துவது, எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 3 நாட்களுக்கு நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினமே தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த கூட்டத்தொடரில் சட்டம் - ஒழுங்கு, தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூடிய போது ஆளுநர் உரையின் போது தமிழக அரசு தயாரித்து அளித்திருந்த சில வரிகளை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்க இருப்பதால், சட்டப்பேரவையில் உள்ள கணினி, ஒலிபெருக்கி மற்றும் இருக்கைகள் சரியாக உள்ளனவா என்பதை சபாநாயகர் அப்பாவு இரண்டாவது முறையாக நேற்று (11.02.2024) தலைமைச் செயலகத்தில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது, சட்டமன்றப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.