தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியும் இருந்தது. ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது, ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் நிதி உதவி அளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், 2018ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் ஆந்திர மாநிலத்திற்கு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டினை தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்டது.
மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு வாய்ப்பே கிடையாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த விவகாரத்திலும் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 8ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவையில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இருந்தாலும், கூட்டணியில் எந்தவிதமான பிரச்சனை இல்லை என்றே சொல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், அக்கட்சியின் நான்காமாண்டு துவக்க விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர மாநில அமைச்சருமான நர லோகேஷ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுகுறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, ‘இது பா.ஜ.க. ஆடும் நாடகம். தமிழகத்தைப் போல இங்கும் பா.ஜ.க. அதன் நாடகவேலையைத் தொடங்கியிருக்கிறது’ என நேரடியாகவே சாடினார்.
தற்போது, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அக்கட்சியின் உயர்மட்டக் குழுவிற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்த முடிவைத் தெரிவித்துள்ளார். உயர்மட்டக் குழுவும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஆந்திர மாநிலத்தின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தெலுங்குதேசம் கட்சியும் ஆதரவளித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் இந்த முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நெருக்கடியாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.