சமீப காலமாகப் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ. சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் உள்துறை இணைச் செயலாளராக எஸ்.பி. அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) பி. ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று இணை மேலாண் இயக்குநராக ஆனந்த் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வி. சரவணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக வீர்பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.