2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.
மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. அதன் பிறகு, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இதற்காக விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மீண்டும் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேற்கு வங்கம் மாநிலம், காக்த்வீப் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “சிஏஏ சட்டம் மதம், சமூகம், கொள்கைகளை மனதில் வைத்து அமலுக்கு வரும். இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. அடுத்த 7 நாள்களில் நாடு முழுவதும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். நான் உங்களுக்கு இந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன்” என்று கூறினார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான சிஏஏ சட்டம் ஆனதற்கு முழு முதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்தது தான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம். 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே சிஏஏவை திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.
தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.