கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் விசாரணையில், சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும், மேலும் இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மாநில அரசு ஒப்புதல் வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதே சமயம் மத்திய அரசு தரப்பில், சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து, பின்னர் அங்கு கல்வீச்சு சம்பவங்கள் உள்ளிட்ட கலவரங்கள் நடக்கவில்லை. விரைவில் அங்கு சட்ட சபை தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என வாதிடப்பட்டது. இப்படியாக வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது.
அதன்படி தற்போது 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, வழக்கின் தீர்ப்பை வழங்கி வருகிறது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்தாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார்.
தலைமை நீதிபதி சந்திரசூட் வழங்கிய தீர்ப்பில், “இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றுதான் ஜம்மு காஷ்மீர். சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அவசர சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது. சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதா என்பது குறித்து ஆராயப்படும். சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு நீக்கியது செல்லும். விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்”என்று தீர்ப்பளித்துள்ளார்.