மத்திய அரசு பல்வேறு பணியிடங்களுக்கு மத்திய அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அரசு பணியில் நியமனம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டது.
அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா மருங்கூர் சேர்ந்த இராமநாதன் மகள் ஐஸ்வர்யா தேசிய அளவில் 47 இடத்தையும் தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், கண்டரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் மகள் பிரியங்கா தேசிய அளவில் 68-வது இடத்தையும் தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும், பண்ருட்டி ஒட்டியுள்ள புதுப்பேட்டையை சேர்ந்த சம்பத் மகள் கிருஷ்ணபிரியா தேசிய அளவில் 514 இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர்கள் மூவரும் பண்ருட்டி அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒரே மாவட்டத்தை சேர்ந்த இவர்களை நேற்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகா மூரி, தமது அலுவலகத்திற்கு வரவழைத்து மூவருக்கும் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பாராட்டி வாழ்த்தினார். இதில் பிரியங்கா கிருஷ்ணபிரியா ஆகிய இருவரும் அவர்களது பெற்றோர்கள் உடன் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா ரயில்வேயில் வேலை பார்த்து வருவதால் அவருக்கு பதிலாக அவர் தந்தை ராமநாதன் தாய் இளவரசி ஆகியோர் வந்திருந்தனர்.
தேர்வில் வெற்றி பெற்றுள்ள மூவரும் சிறந்த முறையில் அரசு பணி செய்து இந்திய ஆட்சி பணியில் சிறந்த பணியாளர்களாக பேரும் புகழும் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வாழ்த்தி பேசி தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மூன்று மாணவிகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்து அவர்களை வரவழைத்து வாழ்த்து தெரிவித்தது, பொதுமக்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவிகள் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.