பாஜகவின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துப் பேசிவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் தமிழக தலைவர் முருகன். சமீபத்தில் வெளியிடப்பட்ட பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழக பாஜக தலைவர்கள் யாருக்குமே வாய்ப்பளிக்கப்படவில்லை. ஹெச்.ராஜாவின் தேசிய செயலர் பதவி கூட பறிக்கப்பட்டது.
தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழக பாஜகவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதில் பாஜக தலைவர்கள் பலரும் அதிர்ப்தியில் உள்ளனர். தமிழக பாஜக தலைவர்களின் முக்கியத்துவத்தை, கட்சியின் தேசிய தலைமையிடம் முருகன் எடுத்துச் சொல்லவில்லை என்கிற ஆதங்கமும் தமிழக பாஜகவினரிடம் இருக்கிறது.
அதேசமயம், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக தலைவர்களுக்கு தேசிய பொறுப்புகளில் முக்கியத்துவம் இல்லை என்கிற அதிர்ப்திகள் அதிகரிப்பது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் முருகனிடம் சிலர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், தேசிய பொறுப்புகளுக்கு இரண்டாவது பட்டியல் வெளியிடப்படவிருக்கிறது என்பதை அறிந்து டெல்லிக்கு பறந்தார் முருகன். ஜே.பி.நட்டாவை சந்தித்து, சீனியர்களின் அதிர்ப்திகளை சொல்லியுள்ளார்.
அதற்கு ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார்கள். மக்களுக்கும் அவர்களுக்குமான உறவு திருப்திக்கரமாக இல்லை. உங்களின் யோசனைகளை பிரதமரின் கவனத்துக் கொண்டு செல்கிறேன் என நட்டா சொல்லியிருப்பதாக தமிழக பாஜகவினரிடம் செய்திகள் பரவியுள்ளன. இது தவிர, திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கடந்த மாதம் டெல்லிக்கு சென்று நட்டாவை சந்தித்த விவகாரத்தின் தொடர்ச்சியாக சில விசயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் பாஜக வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.