தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை புறக்கணித்ததாக பெரியார் பல்கலைக்கழகம், ஒரே நாளில் 57 தற்காலிக ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு குற்றச்சாட்டு குறிப்பாணை (மெமோ) அளித்துள்ளது, பல்கலை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பெரியார் பல்கலையில், இளநிலை உதவியாளர், எழுத்தர், உதவி பதிவாளர் என பல்வேறு நிலைகளில் 329 ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் தொகுப்பூதியம் அடிப்படையிலும், மற்றொரு பகுதியினர் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.
பல்கலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்களை தொகுப்பூதியத்திற்கு மாற்ற வேண்டும்; தொகுப்பூதியத்தை மாத அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும்; ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஊழியர்களை இடமாறுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 23ம் தேதி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இதற்கும் பல்கலை நிர்வாகம் மசியாததால், அடுத்தக்கட்டமாக அக். 8ம் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அவர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பல்கலை விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டதாகக்கூறி, தொழிற்சங்க நிர்வாகிகள் சக்திவேல், கனிவண்ணன், கிருஷ்ணவேணி, செந்தில்குமார் ஆகிய நான்கு பேரை, பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், மறுநாள் அவர்கள் எங்கே பணிக்கு வந்து விடுவார்களோ எனக்கருதிய பல்கலை நிர்வாகம், வருகையைப் பதிவு செய்யக்கூடிய பயோமெட்ரிக் உபகரணத்தில் இருந்தும் அவர்களின் பெயர்களை நீக்கியதோடு, பல்கலைக்குள் நுழையக்கூடாது என்றும் தடை விதித்தது.
துணைவேந்தரின் நடவடிக்கையைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் அக். 30ம் தேதி காலை முதல் இரவு வரை பல்கலை வளாகத்தில் பெரியார் சிலை அருகே தரையில் அமர்ந்து ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 200 பேர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நவ. 1ம் தேதி வரை தொடர்ச்சியாக இந்த போராட்டம் நடந்தது.
இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சங்கீதா முன்னிலையில் பல்கலை தரப்பும், தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பும் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. தொழிலாளர் நலத்துறையின் அறிவுறுத்தலின்பேரில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் நவ. 1ம் தேதி மாலையுடன் மூன்று நாள் காத்திருப்புப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர்.
மீண்டும் நவ. 7ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது, ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நால்வர் மீதான நடவடிக்கையை கைவிட முடியாது என்றும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுதான் முடிவு செய்யும் என்றும் பல்கலை தரப்பினர் கூறினர். தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியும்கூட பல்கலை நிர்வாகம் தொழிலாளர் விரோதப் போக்குடன் தன்னிச்சையாக முடிவெடுத்தது தொழிற்சங்க நிர்வாகிகளிடையே மேலும் மனக்கசப்பை உண்டாக்கியது.
இது இப்படி இருக்க, பல்கலை நிர்வாகமோ வெள்ளிக்கிழமை (நவ. 8) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 57 பேருக்கு ஒரே நாளில் குற்றச்சாட்டு குறிப்பாணைகளை அனுப்பி இருக்கிறது. பிரகாஷ் என்பவருக்கு பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் அனுப்பியுள்ள குறிப்பாணையில் கூறியிருப்பதாவது:
''தமிழக அரசு ஆணைக்கிணங்க கடந்த 31.10.2019ம் தேதி காலை 10 மணிக்கு, பல்கலை வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துணைவேந்தர் தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது. அன்றைய தினம் பணிக்கு வந்திருந்த ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்களில் ஒரு பகுதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நீங்கள் (பிரகாஷ்&தினக்கூலி பணியாளர்) கலந்து கொள்ளாமல் சற்று தொலைவில் மற்ற சிலருடன் சேர்ந்து கூட்டமாக அமர்ந்து கொண்டு இருந்தது, அந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்விற்கு அவமரியாதை செய்ததாக பல்கலை நிர்வாகம் கருதுகிறது. மேற்சொன்ன ஒழுங்கீனமான நடவடிக்கைக்கு தங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது?,'' என்று அந்த குற்றச்சாட்டு குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விளக்கத்தை நவ. 13ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக 57 பேருக்கு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ள நிலையில், காத்திருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட 200 பேருக்கும் இதுபோன்ற குறிப்பாணை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சக்திவேலிடம் கேட்டபோது, ''தேசிய ஒற்றுமைநாள் உறுதிமொழி உள்பட சம்பிரதாயமாக நடக்கும் இதுபோன்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை கலந்து கொள்ளச்சொல்லி பொதுவாக கட்டாயப்படுத்துவதில்லை. இதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது. மேலும், காத்திருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அன்றைய தினம், பணிக்குச் செல்லாமல் ஆப்சென்ட் ஆகியிருந்தனர்.
அப்படி இருக்கும்போது அந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்க முடியும்? ஆசிரியர் அல்லாத பணியாளர்களை ஒடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் எங்கள் மீது இத்தகைய ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து பல்கலை நிர்வாகம் எடுத்து வருகிறது. எங்கள் கோரிக்கைகளை ஏற்று, ஒழுங்கு நடவடி க்கையை பல்கலை நிர்வாகம் கைவிட வேண்டும்,'' என்றார்.