நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவருமான நரட் ராய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் வாரணாசியில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை உ.பி முன்னாள் முதல்வர் நரட் ராய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “பிரதமரின் தேசியவாத சித்தாந்தத்தையும் சிந்தனையையும் வலுப்படுத்துவேன். உலக அளவில் இந்தியாவை பெருமைப்படுத்தி சென்றவர் நரேந்திர மோடி. இந்தியாவின் வெற்றிகரமான உள்துறை அமைச்சர், ஒரு அரசியல் சாணக்கியர். இது சமூகத்தின் கடைசி கட்டத்தில் வாழும் ஏழைகளை பலப்படுத்துகிறது. ஜெய் ஜெய் ஸ்ரீ ராம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இறுதிக் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான நரத் ராய் பா.ஜ.கவில் இணையவுள்ளதாக வெளியான தகவல், உ.பி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.