காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சடடப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், வாரியம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை முதல் அமைச்சர் பழனிசாமி கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த காலங்களை போலவே தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதிகப்படியான சட்டப்போராட்டத்தை நடத்தியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என கூறினார்.
தீர்மானத்தை நிரைவேற்றி தருமாறு அனைத்துக் கட்சி உறுப்பினர்களிடமும் சபாநாயகர் வேண்டுகோள் வைத்தார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், காவிரி விவகாரத்தில் இதுவரை கர்நாடகா சொன்னது போல் நடந்தது இல்லை. இதுவரை தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரை எந்த ஆண்டும் கர்நாடகா வழங்கியதில்லை. பிரதமர் சந்திக்காதது ஜனநாயகத்திற்கு நெருக்கடியான தருணம். முதல்வர் மத்திய அரசுக்கு உரிய நெருக்கடியை கொண்டு வர வேண்டும். காவிரி வாரியத்தை காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு அமைக்க வேண்டும். வாரியத்திற்காக திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார். திமுக எம்எல்ஏக்கள் கருப்பு நிற சட்டை அணிந்து வந்திருந்தனர்.
முதல் அமைச்சர் பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தன. இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.