குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆளுநர் பன்வாரிலாலை உடனடியாக பதவிநீக்கம் செய்ய, இந்திய மொழிகள் செய்தித்தாள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னரைக் குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டதற்காக நக்கீரன் ஆசிரியர் மீது கவர்னர் மாளிகை புகாரளித்தது. இதனடிப்படையில், கடந்த அக் 9-ஆம் தேதி காலை விமானநிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியரை கைது செய்தது தனிப்படை போலீஸ். இதையடுத்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்தக் கைது நடவடிக்கையைக் குறித்து கண்டனம் தெரித்துள்ள இந்திய மொழிகள் செய்தித்தாள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மீதான காவல்துறையினரின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கவர்னரின் செல்வாக்கில் கொடுக்கப்பட்ட இந்த வழக்கில் நீதியரசர் கோபிநாதனின் செயல்பாடு மனநிறைவளிக்கிறது. ஒரு கட்டுரை எழுதியதற்காக அரசமைப்புச் சட்டம் 124 பதியப்படுவது இந்தியாவிலேயே மிகவும் அரிதான விஷயமாகும். பத்திரிகையாளர்கள் மீது நாடு முழுவதும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நீதியரசர் கோபிநாதனின் தீர்ப்பு, ஒட்டுமொத்த இந்திய நீதிமன்றங்களுக்கும் முன்மாதிரியான ஒன்றாக அமைந்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலையிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும். அதேபோல், அரசின் உத்தரவை ஏற்று கண்மூடித்தனமாக கைது மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.