21 வயதில் நீதிபதியாகிறார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மயங்க்பிரதாப் சிங். இந்தியாவிலேயே இளம் வயதிலேயே நீதிபதியாகும் இந்த இளைஞரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
ராஜஸ்தானில் நீதித்துறை பணிகளுக்கான தேர்வு எழுத வயது வரம்பு 23 ஆக இருந்தது. கடந்த ஆண்டு 21 வயது பூர்த்தியானவர்களும் நீதிபதிகளுக்கான நீதித்துறை தேர்வை எழுதலாம் என்று ராஜஸ்தான் மாநில ஐகோர்ட் அறிவித்தது. இதனால், ராஜஸ்தானில் நிறைய இளைஞர்கள் நீதிபதிகளுக்கான தேர்வை எழுதினார்கள். ஜெய்ப்பூரைச் சேர்ந்த 21வயது மயங்க்பிரதாப் சிங் அத்தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞருக்கு படித்த பிரதாப்சிங்கின் படிப்பு காலம் கடந்த ஏப்ரல் மாதம்தான் நிறைவு பெற்றது. அதற்குள், பிரதாப் சிங் நீதித்துறையின் தேர்வு எழுதி நீதிபதியாகி சாதனை படைத்துள்ளார். விரைவில் அவருக்கு நீதிபதி பதவிக்கான அரசாணை வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் இந்தியாவின் இளம் நீதிபதி என்ற சாதனை படைக்கவிருக்கிறார் பிரதாப்சிங்.