நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை நேற்று (09.03.2024) ராஜினாமா செய்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இதனிடையே அனுப் சந்திர பாண்டே பணி ஓய்வு பெற்ற நிலையில் இந்த காலியிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. அதே சமயம் மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயலின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைத்த்திருந்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. மேலும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தற்போது பதவியில் உள்ளார்.
இந்நிலையில் புதியதாக இரு தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து மார்ச் 15 இல் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். ஏற்கனவே இருந்த நடைமுறையின் படி பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்து வந்தனர். இதனையடுத்து மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தினைக் கொண்டு வந்து தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
மேலும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக மார்ச் 15 இல் ஆலோசனை நடக்க உள்ளதால் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.