இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-2024) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவையில் இன்று (01-02-24) மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து 58 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். அப்போது, மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
இந்த நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது, “இந்த பட்ஜெட் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தும் உத்தரவாதமாகும்.
இந்த பட்ஜெட்டில், ஏழைகளுக்கு மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள ஏழைகளுக்கு நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகளை கட்டியுள்ளோம். வருமான வரிவிலக்கு திட்டம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 1 கோடி மக்களுக்கு நிவாரணம் அளிக்கும். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” என்று கூறினார்.