இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவை அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று மக்களவை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று முன்தினம் (08.02.2024) தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் (10.02.2024) நிறைவடைகிறது. வழக்கமாக சனிக்கிழமைகளில் நாடாளுமன்ற அலுவல்கள் நடக்காத நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடவுள்ளதால் மக்கள் மத்தில் எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது. அதே சமயம் நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நாடாளுமன்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று அவைக்கு வர தலைமை கொறடா உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில் ‘நாடாளுமன்றத்தில் முக்கிய அலுவல் இருப்பதால் கட்டாயம் அவைக்கு வர வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.