Skip to main content

“மெரினாவைத் திறந்து விடுங்கள்! காவிரி மேலாண்மை வாரியம் தானாக அமையும்!” -விளாசுகிறார் பொன்ராஜ்!

Published on 03/04/2018 | Edited on 03/04/2018
pondy


காவேரி மேலாண்மை வாரியம் குறித்த தமிழக மக்களின் உணர்வை, அப்படியே பிரதிபலிக்கிறார் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ். ஒரே விஷயம்தான்! அதற்கு, திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்து, விழிப்புணர்வூட்ட எத்தனிக்கிறார். நிலைகொள்ளாது, கொட்டித் தீர்த்த அவரது குமுறல் இதோ -  

 

“ஸ்கீம் என்றால் காவேரி மேலாண்மை வாரியம் இல்லை என்ற வஞ்சகமான, குழப்பமான தீர்ப்பளித்து,  20 ஆண்டு கால சட்ட போராட்டத்தை நீர்த்து போகச் செய்து,  அரசியல் சூழ்ச்சிக்கு அடிபணிந்து,  தமிழகத்திற்கு வஞ்சகம் செய்துவிட்டதாக,  மக்கள் நம்பக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது,   பாராளுமன்றத்தில் பதவி விலகல் கண்டன தீர்மானத்தை  (இம்பீச்மெண்ட் -  Impeachment) பாராளுமன்றத்தில்,  தமிழக  எம்.பி.க்கள்  கொண்டு வர வேண்டும்.

 

ஏனென்றால்,  மத்திய அரசும்,  உச்ச நீதி மன்ற நீதிபதிகளால் குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதியும் இணைந்து செய்த சூழ்ச்சி,  ஒவ்வொன்றாக இப்போது வெளி வந்து கொண்டிருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

 

இந்த அநீதியான தீர்ப்பை அரசியல் சாசன பெஞ்சிற்கு மாற்றினால் ஒழிய,  தமிழகத்திற்கு காவேரி நதி நீர் தீர்ப்பாயம் கொடுத்த வடிவில்,  காவேரி மேலாண்மை வாரியம் கிடைப்பதற்கு வழியில்லை. அதற்காகவே,  இந்தத் தலைமை நீதிபதி மீது இம்பீச்மெண்ட் கொண்டு வரவேண்டும்.  ஏன் தெரியுமா?


அரசியல் சாசன சட்ட உரிமையின் மூலம் கிடைத்த மாநில அரசின் கூட்டாட்சி தத்துவத்திற்கு இப்போது உலை வைக்கப்பட்டிருக்கிறது. உலக வழக்கத்தின் மூலம் கிடைக்கும் கடை மடை பாசனத்திற்கான முன்னுரிமை திட்டமிட்டு பறிக்கப்படுகிறது.

 

இவ்வாறு பறிப்பதையே,  தேர்தல் அரசியலை மையமாக வைத்து,  ஆளும் பி.ஜே.பியும், ஆண்ட காங்கிரஸும் விளையாட்டாகச் செய்து வருகின்றன.  இதனால்,   இரு மாநில மக்களும் பலிகடாவாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. 

 

தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற போராட்டங்கள் பல்வேறு வடிவில் நடக்கின்றன.  ஆனால்,  உண்மையாக அரசியலில் என்ன நடக்கிறது?

 

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும்  ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், நீதித்துறையும், அதிகார வர்க்கமும், ஊடகங்களும் ஆட்சியை எப்படி நடத்துகிறார்கள் என்பது குறித்த விழிப்புணர்வு  மக்களுக்கு வராதவரையிலும்  ஒரு மாற்றமும் வந்துவிடப் போவதில்லை.

 

இன்றைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வில்லை. ஏனென்றால், உச்ச  நீதிமன்ற தீர்ப்பானது,  மத்திய அரசுக்கே விளங்காத தீர்ப்பாக, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத தீர்ப்பாக அமைந்து, அதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனுச்செய்ததோடு மட்டுமல்லாமல், மேலாண்மை வாரியத்தின் அமைப்பை, செயல்பாட்டை மாற்றலாமா என்று ஆலோசனை கேட்கிறது. அந்த வகையில்,  தமிழகத்தின் உரிமையை நீர்த்துபோகச் செய்யும் தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.


இதை எதிர்த்து அதிமுக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யும் நிலையில், எப்படி காவேரி மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின்படி அமைந்து,  4 மாநிலங்களுக்கும் பொதுவான அமைப்பாக வடிவெடுக்கும். இது இனி நடக்காது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

 

20 வருடங்கள்  சட்டப்போராட்டம் நடைபெற்று,  தீர்ப்பு வழங்கப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றி, தமிழகத்திற்கு 14 டி.எம்.சி நீரைக் குறைத்து, 15 வருடங்களுக்கு  அப்பீல் போக முடியாது என்று தீர்ப்பெழுதி,  இன்றைக்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கேள்விக்குறியாக்கிவிட்ட தீர்ப்பாக அமைந்திருக்கிறதைப் பார்க்கும் போது, அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழுகிறது. எதை வைத்து அந்த சந்தேகம் வருகிறது என்று சொன்னால் - 

 

உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகளுக்கு ரோஸ்டர் முறைப்படி வழக்குகளை வழங்குவதில் அரசியல் மற்றும் மற்ற தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு,  ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியதால்தான். 

 

இதன் பின்னனியில்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்கிய குழப்பமான காவிரி தீர்ப்பு,  இன்றைக்கு அனைவரின் சந்தேகத்திற்கும், கேள்விக்கும் உள்ளாகி இருக்கிறது.

4 மாநிலங்கள் சார்ந்த காவிரி நதி நீர் வழக்கில்,  தீர்ப்பு ஏன் குழப்பமாக எழுதப்பட்டு,  இத்தனை குழப்பத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது? ஏன் அது கர்நாடகத்திற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது? இதைப் பார்க்கும்போது,  இந்த சந்தேகம் நியாமானதுதானே என்று சிந்திக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இப்படிப்பட்ட குழப்பமான தீர்ப்பை வழங்கி,  இன்றைக்கு நடக்கின்ற  நாடகங்களைப் பார்க்கும் போது, இது மத்திய அரசின் தலையீட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்படுகிறது. இது கர்நாடக அரசியலை மையமாக வைத்து,  பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வளைக்கப்பட்ட தீர்ப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் மக்களுக்கு வருவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

நடக்கும் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக அமைந்திருக்கின்றன. 

மத்திய அரசின் விளக்கம் கேட்கும் பதில் மனுவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? 

1. மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தின் அமைப்பை, செயல்பாட்டை மாற்ற எத்தனித்திருக்கிறது.
2. அதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் புகுத்தி, அதை கர்நாடக ஆட்சியில் இருக்கும் அரசியல் வாதிகளின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட தீர்மானித்து, வஞ்சக எண்ணத்துடன் தீர்ப்பிற்கு விளக்கம் கேட்டிருக்கிறது. 
3. கர்நாடக சட்ட சபை தேர்தலை காரணம் காட்டி, கர்நாடகாவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்றால் என்ன அர்த்தம்? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராதா?  உரிமைப்பட்ட தண்ணீரை ஒவ்வொரு தீர்ப்பிலும் இழந்து நிற்கிறது தமிழகம்.  அதையும் ஏற்றுக்கொண்டு, கொடுக்க வேண்டிய நீரை சரியாகக் கொடுப்பதை உறுதி செய்ய மேலாண்மை வாரியமும் அமைக்க முடியாவிட்டால் அப்புறம் எதற்கு தீர்ப்பு? அப்புறம் எதற்கு உச்ச நீதிமன்றம்?
4. இது, தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து, அரசியல் சாசன சட்டத்தின் படி அமைக்கப்பட்ட காவேரி நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பையே நீர்த்து போகச் செய்வதற்கு,  பிரதமர் மோடியின் மத்திய அரசு, உச்சநீதி மன்ற தீர்ப்பை வளைத்து,  கர்நாடக அரசின் பக்கம் நிற்கிறது என்று,   அம்மாநில மக்கள் நம்பும் வகையில்,  மிகத் தெளிவாகத் தெரிகிறது.

எனவே, மத்திய அரசின் விளக்கம் கேட்பு மனுவினை ஏற்று,  விரைவில் தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தள்ளுபடி செய்யப்படும்.

மேலாண்மை வாரியத்தை மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மாற்றி அமைப்பதற்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிடும். 


192 டி.எம்.சி யில் இருந்து 177 டி. எம்.சியாக 14 டி.எம்.சியை இழந்தோம். இப்போது மேலாண்மை வாரியத்தை,  கர்நாடக அரசியல்வாதிகளின் கைகளில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நுழைப்பதன் மூலம், அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நாடகம் விரைவில் நிறைவேறும்.இப்படித்தான் நிறைவேற வேண்டும் என்ற நாடகம் விரைவில் அரங்கேறும் என்ற சந்தேகமும் வலுவாக எழுகிறது.

 

இவை அனைத்தையும், மக்கள் இன்றைக்கு,   பிரதமர் மோடியின் மத்திய அரசு, உச்சநீதிமன்ற நீதிபதிகளால் குற்றம் சாட்டப்பட்ட உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியின் ஆதரவோடு, குழப்பமான தீர்ப்பை ஸ்கீம் என்ற வார்த்தையை வைத்து,  தீர்ப்பை வரவழைத்திருக்கிறது. இதனை ஆதரிக்க,  அதிமுக அரசை தனது பலத்தால் வளைத்திருக்கிறது.  நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அதிமுக எம்.பி.க்கள் ஆதரவோடு தாக்கல் செய்யாமல் தடுத்திருக்கிறது என்று கருதுகிறார்கள்.

 

6 வார காலம் முடியும் வரை ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்காமல் திணறி, கடைசிநாளில் தன் சுயரூபத்தை காண்பித்திருக்கிறது மத்திய அரசு என்று சந்தேகப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறதா இல்லையா என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகிறேன்.
இத்தனைக்கும் உடனிருந்து விட்டு,  இன்றைக்கு அதிமுக அரசு,  உண்ணாவிரதப் போராட்டம் என்று நாடகமாடுவதன் மூலம், பி.ஜே.பி.யால் இயக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது.

 

இத்தனையையும் பார்க்கும் போது,  தமிழக அரசை, மத்திய அரசு  ஒன்று ஏமாற்றியிருக்க வேண்டும்.  இல்லையென்றால்,  தமிழக அரசின் ஒத்துழைப்போடு இந்த நாடகம் அரங்கேறி இருக்கவேண்டும். இது மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் துணை கொண்டு,  நீதியை வளைத்திருக்குமோ என்ற மக்களின் ஐயப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

 

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்,  20 வருட சட்ட போராட்டத்திற்கு நீதி சொல்ல வேண்டிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதியில் இருந்து வழுவி, மோடி அரசின் அரசியல் நோக்கத்திற்கு,  உடனிருந்து குழப்பமான தீர்ப்பை அளிக்க வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கலாம் என்று மக்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால், அதை எப்படி வெளிக்கொண்டு வருவது?

 

எனவே,  தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யக்கூடாது.  மாறாக,  உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி மீது பாராளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டுவந்து, இந்தத் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் மத்திய அரசின் வஞ்சகத்தை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இந்த சூழ்நிலை வந்தால் தான், இந்த தீர்ப்பை மாற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும்.  இந்த வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி, மக்களால் வஞ்சகமான, தவறான தீர்ப்பாக பார்க்கப்படும் தீர்ப்பை மாற்றினால்தான் காவிரி மேலாண்மை வாரியம் எவ்வித மாற்றமும் இன்றி அமைவதற்கு வழி வகை பிறக்கும்.


இல்லையென்றால்,  பல்லில்லா மேலாண்மை வாரியத்தை சில மாற்றங்களோடு மத்திய அரசு அமைக்கும். அப்படிப்பட்ட பல்லில்லா வாரியத்தை வைத்து என்ன செய்வது?

இதை தமிழக அரசியல் கட்சிகள் செய்யுமா?  செய்யாது.  ஊடகங்கள் விவாதிக்குமா?  விவாதிக்காது. இதை வலியுறுத்தி நமது அரசியல் கட்சிகள் ஒரே நாளில் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவார்களா? போராடமாட்டார்கள். ஏனென்றால், இந்த அரசியல் நிலைப்பாட்டை இவர்கள் எடுப்பார்களா?  எடுக்க மாட்டார்கள்.

அப்படியென்றால்,  நமது அரசியல் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?
அரசியல் கட்சிகள்
உண்ணாவிரதம் இருக்கலாம், 
பாமர மக்களின் கடைகளை அடைத்துப் போராடாலாம், 
டோல் கேட்டை நொறுக்கலாம், 
மத்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிடலாம்,
ரயிலை மறிக்கலாம், 
விமானத்தை மறிக்கலாம். 
எல்லோரும் போராட ரெடி....

3-ஆம் தேதி ஒரு போராட்டம் -  எல்லாம் விவசாயிகள் கூட்டமைப்பு, வணிகர் சங்கம் - ரயில் மறியல், விமான மறியல், சாலை மறியல் போராட்டம், அதிமுக உண்ணாவிரதம் - தனித்தனியாக
5-ஆம் தேதி ஒரு போராட்டம் - எதிர்கட்சிகள் திமுக தலைமையில் கடை அடைப்பு
6-ஆம் தேதி ஒரு போராட்டம் – தேமுதிக போராட்டம்
11-ஆம் தேதி ஒரு போராட்டம் - மோடியை எதிர்த்து கடை அடைப்பு வணிகர் சங்கம் போராட்டம்
இனி நடிகர் சங்கம் ஒரு நாள் போராட்டம்.

இவர்கள் அனைவரும் நேரத்தை வீணடிப்பார்கள், ஆனால் ஒன்றும் நடக்காது.  ஆனால் இது நடக்கும் -
1. உச்ச நீதி மன்றம் தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு மனுவை முதலில் மத்திய அரசின் விளக்கம் கேட்டும்,  மனுவை காரணம் காட்டியும் தள்ளுபடி செய்யும்.
2. இரண்டாவது,  மோடி அரசின் கோரிக்கையை ஏற்று,  காவேரி மேலாண்மை வாரியத்தின் அமைப்பை நீர்த்துப் போக செய்ய,  அதன் அமைப்பை மாற்றுவார்கள்.  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உள்ளே நுழைக்க அனுமதிப்பார்கள்.


இது கண்டிப்பாக நடக்கும், அதற்குள் நம் அரசியல் கட்சிகள் அடுத்த போராட்டத்திற்குப் போய்விடும். 
ஊடகங்கள் தனக்கு டி. ஆர். பி. ரேட்டிங் கொடுக்கும் சினிமா நடிகர்கள், நாலாந்தர அரசியல்வாதிகள் பின்னால் போய் விடும். 
மக்களும், விவசாயிகளும் ஏமாற்றப்படுவார்கள். மீண்டும் ஊடகம் யாரை காண்பிக்கிறதோ, பணம் யார் கொடுக்கிறார்களோ, யார் முதல்வராக வருவார் என்ற பிம்பம் கட்டி எழுப்பப்படுகிறதோ, அவர்களைத் தேர்ந்தெடுத்து,  தண்ணீர் இன்றி  விவசாயிகள் செத்து மடிவார்கள்.  குடிப்பதற்கு  தண்ணீர் கிடைக்காமல் மக்கள் மடிவார்கள்.  இளைஞர்கள் தனித்தனியாகப் பிரிந்து கிடந்து வேலையில்லாமல், வேதனையில் வீழ்வார்கள். 

இது நடக்கும், பாருங்கள்.

இதைப் படித்து, புரிந்தால் விழிப்புணர்ச்சி கொள்ளுங்கள். 
ஆனால் தடையை மீறி போராடிய மாணவர்களும் இளைஞர்களும்,  பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், அமைதியாகப் போராடி, சென்னை மெரினாவை அடைத்து பூட்டு போடச்செய்து சாதனை படைத்தவர்கள்.

தமிழக அரசு உண்மையாக,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்துப் போராட நினைத்தால், மெரினாவைத் திறந்து விட்டால் போதும்.  இன்றைக்கு தமிழக இளைஞர்களும், மாணவர்களும் போராடி அதை அமைப்பார்கள். ஆனால் அதை நடத்துவதற்கு  தமிழக அரசு விடாது.

 

எதுவெல்லாம்  நடக்கும்? அரசியல் கட்சிகள் போராட்டம், உண்ணாவிரதமெல்லாம் நடக்கும்.  ரயில் மறியல் நடக்கும்; சாலை மறியல் நடக்கும் - அடுத்த பிரச்சனை வரும் வரை.

இது தான் இன்றைய அரசியல் நிலைமை. 
இன்றைய அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை,  வஞ்சகத்தைப் புரிந்து கொண்டவர்களாக தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பான்மையான ஒட்டுப்போடும் மக்கள், இந்த அரசியல் கட்சிகளின் கண்மூடித்தனமான ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

எனவே தான்,  இளைஞர்கள் எவ்வாறு போராடினாலும், இறுதியில் தேர்தல் என்று வரும் போது, அரசியல் கட்சிகள் ஒன்றாக இருக்கிறார்கள், தெளிவாக இருக்கிறார்கள், வெற்றி பெறுகிறார்கள், ஆட்சி அமைக்கிறார்கள், ஊழல் பண்ணுகிறார்கள், கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், பதவியைப் பிடிக்கிறார்கள். இளைஞர்கள் தனித்தனியாகப் பிரிந்து போய் விடுகிறார்கள். மக்களது அறியாமையை அறுவடை செய்கிறார்கள் அரசியல் வாதிகள்.
வாழ்க ஜனநாயகம், வாழ்க பணநாயகம், வாழ்க தேர்தல் வெற்றி அரசியல்.

யாருமே வாழாத நாட்டில் எந்த டீக்கடைக்காரர் டீ ஆற்றப் போகிறார்?

-இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வெ.பொன்ராஜ்.

சார்ந்த செய்திகள்