எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியமைச்சரை சபாநாயகர் தனபால் அழைத்தபோது, எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேசுவதற்கு முற்பட்டார். ஆனால், சபாநாயகர் அதற்கு அனுமதிக்கவில்லை.
அப்போது, ’’எங்கள் கருத்தைச் சொல்ல அனுமதிக்க வேண்டும். எங்கள் கருத்தைச் சொல்லிவிடுகிறேன்‘’ என்றார் துரைமுருகன். இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் தனபால், ‘’நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய நிதியமைச்சரை அழைத்திருக்கிறேன். உட்காருங்கள்‘’ என்றார்.
ஆனாலும் இருக்கையில் அமராத துரைமுருகன், ‘’எங்கள் கருத்தைச் சொல்கிறேன். அதற்கும் சேர்த்தே அவர் பதில் சொல்லட்டும்‘’ என்று சொல்ல, ‘’உங்களுக்குப் பேச அனுமதியில்லை. மைக் தரமாட்டேன். நீங்க என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள். நீங்கள் சொல்வது எதுவும் சபைக் குறிப்புகளில் ஏறாது’’ என்றார் சபாநாயகர் தனபால் சற்றே கோபமாக!
இருப்பினும் துரைமுருகன் பேசுவதற்கு முயற்சித்தபோது, ‘’பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்துவிட்டார் நிதியமைச்சர். நீங்கள் உட்காருங்கள்‘’ என்று சபாநாயகர் மீண்டும் வலியுறுத்தியபோதும் துரைமுருகன் பேசுவதை நிறுத்தவில்லை. இருவருக்கும் இப்படி வாக்குவாதம் நடந்த நிலையில், ஓபிஎஸ் பட்ஜெட்டை வாசிக்க, துரைமுருகன் பேசிக்கொண்டே இருந்தார். இதனால் சபையில் கூச்சல் எழுந்தது! சிறிது நேரத்தில் சபை அமைதியானதும், துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர்!