ஏழு பேரை விடுவிப்பதில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யபப்ட்டுள்ளது.
தன்னை விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஒரு வாரத்தில் முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், "பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யும் கருணை மனு மீது குடியரசுத் தலைவர்தான் முடிவெடுப்பார். பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பதில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அனைத்து அம்சங்களையும் ஆளுநர் ஆராய்ந்தார். ஏழு பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையைச் சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறிய நிலையில், குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று தற்போது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனு, பிப்ரவரி 9- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.