அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்தது திமுக! நேற்று (05.03.2021) நள்ளிரவில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது பாஜக!
காங்கிரசின் ஆதங்கம், ராகுல் காந்தியின் பிடிவாதம் என அனைத்தும் சேர்ந்ததால் 25 சீட்டுகள் வரை காங்கிரசுக்கு கொடுக்கலாம் என தீர்மானித்திருந்த திமுக தலைமை, பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதால், அதே எண்ணிக்கையைக் காங்கிரசுக்கு ஒதுக்கிவிடலாம் என தற்போது ஆலோசித்திருக்கிறதாம்.
35-க்கும் குறையாமல் சீட்டுகள் வாங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் வலியுறுத்தி வந்தார் ராகுல் காந்தி. இறுதியில் 30 இடங்களுக்கு ஒப்புக்கொள்ளலாம் என முடிவு செய்திருந்தாராம். ஆனால், தற்போது 20 இடங்கள்தான் என திமுக தலைமை சொன்னால் அதை ஏற்பதா? வேண்டாமா? என்கிற தவிப்புடனே இருக்கிறது சத்தியமூர்த்தி பவன். இதுகுறித்து ராகுலுக்கு தகவல் சென்ற நிலையில், ‘நோ கமெண்ட்ஸ்’ என்கிறாராம் ராகுல்! ஏன், இப்படி சொல்கிறார் என குழம்பிப் போயுள்ளனர் காங்கிரஸ் நிர்வாகிகள் !