
மாணவர்களின் நலன் கருதியே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார். கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12 ஆம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்த பிரதீபாவுக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் தான் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தனியார் கல்லூரியில் சேரும் அளவிற்கு தனது பெற்றோர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்து படிப்பில் சேரவில்லை.
தொடர்ந்து மனதைரியத்துடன் நீட் தேர்வுக்கான வகுப்புகளுக்கு சென்று இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில் மனமுடைந்த அவர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
எந்த துறையில் படித்தாலும் முன்னேற முடியும் என மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழை பிழைப்பாய் வைத்து பொய் பிரச்சாரம் செய்வதை நிறுத்தவேண்டும்; தமிழை தாயாக நினைக்க வேண்டும்.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக மாணவி மரணம் அடைந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது; இரண்டாண்டு முன்பே நீட்டுக்கு பயிற்சி அளித்திருக்க வேண்டும். தமிழகத்தில் சுயநல அரசியலுக்காக நீட் தேர்வை காரணம் காட்டி பொய்யான பிரச்சாரத்தை பரப்பிவருகின்றனர்.
தமிழகம் மட்டுமல்ல குஜராத்திலும் நீட் தேர்வை வேண்டாம் என்கிறார்கள்; தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு திணிப்பது போல் சொல்வது தவறு மாணவர்களின் நலன் கருதியே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.