எதிர்க்கட்சி தலைவர்களுடனான ஆலோசனையின் போது, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![modi on lockdown extension](http://image.nakkheeran.in/cdn/farfuture/JQjbwEB6NMJH30rAksr-bcGxaNrejJ3We92ZOzaGTRs/1586342540/sites/default/files/inline-images/dfdfdf_5.jpg)
உலகம் முழுவதும் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ள கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் 5000க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், எதிர்க்கட்சி தலைவர்களுடனான ஆலோசனையின் போது, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![nakkheeran app](http://image.nakkheeran.in/cdn/farfuture/GAM9yPmsQMBNXbsH3VeYWvyrx5DaJfH8O7o_YytYaWw/1586343047/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_25.gif)
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் பேசிய மோடி, முழு உலகமும் தற்போது கரோனாவின் கடுமையான சவாலை எதிர்கொண்டு வருவதாகவும், தற்போதைய இந்த நிலைமை மனிதக்குல வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ள நிகழ்வாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வைரசின் தாக்கத்தை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி, "நாட்டில் தற்போதைய சூழல் ஒரு அவசரநிலைக்கு ஒப்பானதாக உள்ளது. இந்நேரத்தில் கடுமையான முடிவுகளை எடுப்பது அவசியமாக்கியுள்ளது, நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். சில மாநில அரசுகள் மற்றும் துறைசார் நிபுணர்கள், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரைத்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 11 அன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள சூழலில், அந்த கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.