Skip to main content

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அதிஷி!

Published on 09/02/2025 | Edited on 09/02/2025

 

Atishi resigned as delhi Chief Minister

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த 5ஆம் தேதி (05.02.2025) ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.  கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இந்த ட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டது. இதனால் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது. இந்த 3 கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.

இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (08.02.2025) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆரம்பம் முதலே பாஜகவின் கை ஓங்கியிருந்த நிலையில் 3 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேசமயம் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டவர்கள் தோல்வியை சந்தித்தனர். புதுடெல்லி சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் பர்வேஷ் வர்மாவை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.

ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட மனிஷ் சிசோடியவும் தோல்வியை தழுவினார். இந்த சூழலில்தான் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரும், டெல்லி முதல்வருமான அதிஷியை விட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி முன்னிலை வகித்து வந்தார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் 989 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி த்ரில் வெற்றிபெற்றார். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் அதிஷி இன்று (09.02.2025) காலை 11.15 மணியளவில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்தார். அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளுநரிடம் கொடுத்தார்.

இதனையடுத்து ஆளுநர் சக்சேனா டெல்லியின் 7வது சட்டமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பர்வேஷ் சர்மா, பன்சூரி ஸ்வராஜ் மற்றும் வீரேந்திர சச்தேவா முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதோடு பாஜக தேசிய செயலர் துஷ்யந்த் கவுதம் மற்றும் மனோஜ் திவாரி எம்.பி. உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்