சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு இன்று (03.12.2023) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர்களைக் காணொளி வாயிலாகத் தொடர்பு கொண்டு கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அரசு உயர் அலுவலர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளேன். அந்த அடிப்படையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4967 இதர நிவாரண மையங்களில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே அழைத்து வந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் 225 வீரர்களைக் கொண்ட ஒன்பது குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. புயலின் போது மரங்கள், மின் கம்பங்கள், மின் கம்பிகள் கீழே விழும் அபாயம் உள்ளதால் மக்கள் வெளியே வராமல் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க அறிவுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே. பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.அ. ராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் உடனிருந்தனர்.