Skip to main content

கார்ப்பொரேட்டுகளின் வேட்பாளராகக் களமிறங்கிய மோடி, நாட்டையே அவர்களின் வேட்டைக்காடாக்குவதில் தீவிரமாகியிருக்கிறார்! வேல்முருகன்

Published on 14/03/2018 | Edited on 14/03/2018

கார்ப்பொரேட்டுகளின் வேட்பாளராகக் களமிறங்கிய மோடி, நாட்டையே அவர்களின் வேட்டைக்காடாக்குவதில் தீவிரமாகியிருக்கிறார்! அதற்காக "ஹெல்ப்" எனும் பேரழிவுத் திட்டத்தினையே தீட்டியிருக்கிறார்! அதில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரையிலான 2,40,000 சதுர கிலோமீட்டர் பரப்பையும் சேர்த்திருக்கிறார்! இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை முற்றாகவே அழித்துவிடும் இதனைத் தடுத்தாக வேண்டும் என தமிழக அரசையும் மக்களையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது என கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகுன்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

 ஏற்கனவே தமிழகத்தின் டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் உட்பட இந்தியாவில் மொத்தம் 30 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அதானி வெல்ஸ்பன் எக்ஸ்ப்ளோரேஷன், ஜெம் லெபாரட்டரீஸ் உள்ளிட்ட கார்ப்பொரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஒன்றிய பாஜக மோடி அரசு.
 

இதில் அதானி மோடியின் ஆத்ம நண்பர் என்பது எல்லோருக்குமே தெரியும்; ஜெம் லெபாரட்டரீஸ் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பியான சித்தேஸ்வராவிற்குச் சொந்தமானது.

 

narendra modi


 

15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய் மற்றும் 22 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுப்பது இவர்களின் இலக்கு.
 

இதுபோக, இப்போது ஸ்பெஷலாக "ஹெல்ப்" எனும் பேரழிவுத் திட்டத்தின் கீழ் புதுச்சேரியின் மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை 2,40,000 ச.கி.மீ பரப்பளவு நிலம் மற்றும் கடல் பகுதிகள் ”நிலத்தடி எரிபொருள் வள இருப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் முதல் கட்டமாக 4,099 ச.கி.மீ பரப்பளவில் 24 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.
 

கடலூர் மாவட்டம் தியாகவள்ளி முதல் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரையிலான 731 ச.கி.மீ நிலப்பகுதியில் 10 கிணறுகள்.
 

கடலூர் மாவட்டம் முதல் வேளாங்கண்ணி அடுத்து புஷ்பவனம் வரை 2574 ச.கி.மீ கடல் பகுதியில் 10 கிணறுகள்.
 

மரக்காணம் முதல் கடலூர் வரையிலான 1794 ச.கி.மீ கடல் பகுதியில் 4 கிணறுகள்.
 

இந்திய ஒன்றியம் முழுவதும் 65 கிணறுகள் என்றால் தமிழகத்தில் மட்டுமே 24 கிணறுகள். அதாவது இந்திய ஒன்றியம் சந்திக்கும் அழிவில் 40% அழிவை தமிழகம் சந்திக்கும்.
 

நிலத்தின் அடியில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப்பொருள்தான் ஹைட்ரோகார்பன். இது ஆக்ஸிஜனுடன் சேரும்போது எயந்திரங்களை இயக்கும் ஆற்றலைப் பெறுகிறது. பெட்ரோல், டீசல், நாப்தா, நிலக்கரி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள் வகைகளும் இந்த ஹைட்ரோகார்பனில் இருந்துதான் பிரித்தெடுக்கப்படுகிறது.
 

இந்த ஹைட்ரோகார்பனை உறிஞ்சி எடுப்பது அந்த நிலத்தை எதற்கும் உதவாத பாழ்நிலமாக்கிவிடும்; அதனால் மனிதர்கள் அங்கே வாழவே முடியாது போய்விடும். இதனால்தான் இதனை அழிவுத் திட்டம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
 

இதனைக் குறிப்பாக தமிழ்நிலத்தில் செயல்படுத்தக் காரணமே, ”தமிழ் இன அடையாளத்தையே அழித்தொழிக்கும்” மோடியின் தீராத கறைதான்.

 

Velmurugan


 

அதனால்தான் காவிரி வாரியத்தையே அவர் அமைக்கவில்லை; அமைக்கவே மாட்டார் என்பதுதான் உண்மை.
 

அதற்காக, எல்லா நதிகள் மீதும் டெல்லிக்கே உரிமை என்பதாக “தேசிய நதிகள் வாரியம்” என ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் நதிகள் அனைத்தையும்கூட கார்ப்பொரேட்டுகளுக்குச் சொந்தமாக்கிவிடும் திட்டமும் மோடிக்கு உள்ளது.

 

இதனால்தான் கார்ப்பொரேட்டுகளின் வேட்பாளராகக் களமிறங்கிய மோடி, நாட்டையே அவர்களின் வேட்டைக்காடாக்குவதில் தீவிரமாகியிருக்கிறார்!

 

அதற்காகத்தான் "ஹெல்ப்" எனும் பேரழிவுத் திட்டத்தினையே தீட்டியிருக்கிறார்!

 

அதில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரையிலான 2,40,000 சதுர கிலோமீட்டர் பரப்பையும் சேர்த்திருக்கிறார்!

 

இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை முற்றாகவே அழித்துவிடும் இதனைத் தடுத்தாக வேண்டும் என தமிழக அரசையும் மக்களையும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்