தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்புகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் எனப் பலரும் உடன் இருந்தனர். அதேபோன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார்.