பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என நக்கீரன் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. "ஜெ.பாணியில் பங்களா கட்டிய பீலா ராஜேஷ்" என்ற நக்கீரனின் செய்தியையடுத்து மத்திய அரசு அதுபற்றி விசாரிக்குமாறு மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியது.
அந்த கடிதத்தை தொடர்ந்து பீலாவின் கணவர் ராஜேஷை சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக எடப்பாடி அரசு நியமித்தது. அதேபோல, வணிக வரித்துறை செயலாளராக பீலா ராஜேஷை நியமித்தது. வணிக வரித்துறை செயலாளரான பிறகு பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஜோதி நிர்மலாவை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிட்டு, சங்கர் ஐ.ஏ.எஸ்.ஸை பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி.யாக தமிழக அரசு நியமித்துள்ளது.
கணவர் ராஜேஷ் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக ஆனதற்கும், ஜோதி நிர்மலா மாற்றப்பட்டதற்கும் பீலா ராஜேஷ்தான் காரணம் என்கிறார்கள் ஐ.ஏ.எஸ் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். கோடிக்கணக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் ஒரு களங்கமாக அறியப்பட்ட பீலாவுக்கு இவ்வளவு செல்வாக்கா? என பேசிக் கொண்டிருக்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சார்ந்தவர்கள்.