நித்தியானந்தா மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க தயாராகிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல்வேறு வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த நித்தியானந்தா சமீபத்தில் தலைமறைவானார். காலாவதியான பாஸ்போர்ட் வைத்துள்ள நித்தியானந்தா, நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. அதனையடுத்து ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கிய நித்தியானந்தா அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க திட்டமிட்டதாகவும், அந்த நாட்டிற்கு கைலாசா என பெயரிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவல்களை ஈக்வடார் நாட்டு தூதரகம் மறுத்ததோடு, தங்கள் நாட்டிடம் நித்தியானந்தா அடைக்கலம் கேட்டதாகவும், ஆனால் தங்கள் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தது.
நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்த தகவலைப் பெற வழிவகை செய்யும் ப்ளூ கார்னர் நோட்டீஸை இன்டர்போல் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் ஜனார்த்தன சர்மா என்பவர் தனது இரண்டு மகள்களை நித்தியானந்தாவிடம் இருந்து மீட்டுத் தருமாறு மனு அளித்திருந்தார். குஜராத்தில் நித்தியானந்தா மீது நடக்கும் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு உத்தரவு வெளியானவுடன் நித்தியானந்தாவை கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த மதுரையைச் சேர்ந்த பெண் பல் மருத்துவர் ஒருவர் காணவில்லை. ஆனால் அவர் பேசும் பழைய வீடியோவைத்தான் நித்தியானந்தா வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது. பல் மருத்துவர் காணாமல் போனதும் பெரும் விவகாரமாக பேசப்படுகிறது.
இந்தநிலையில் பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் உள்ள கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய நித்தியானந்தா, இதற்காக ரூபாய் இருபது கோடி வசூல் செய்திருப்பதாகவும், அதற்கு பிறகு 48 நாள் நடக்கும் மண்டல பூஜைக்கும் பல கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் பல்வேறு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா, இன்னொரு பக்கம் கும்பாபிஷேகம் என கூறி பண வசூல் நடத்தி வருவரும் போலீசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் விரைவில் நித்தியானந்தாவை கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.