உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பை நிராகரித்திருந்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை புறக்கணித்துள்ளனர்.
இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவான ஜனவரி 22ஆம் தேதி அன்று மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், பண்டிகை என்பது அனைவருக்குமானது. அதனால், ஜனவரி 22ஆம் தேதி அன்று மத நல்லிணக்கப் பேரணி நடத்தவுள்ளேன். மேற்கு வங்கத்தில் புகழ்பெற்ற காளி கோவிலில் பூஜை செய்த பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அங்கிருந்து பேரணி தொடங்கும்.
அதனை தொடர்ந்து, ஹசரா முதல் பூங்கா விளையாட்டு மைதானம் வரை மத நல்லிணக்கப் பேரணி சென்று அங்கு கூட்டம் நடத்தப்படும். இந்த பேரணி செல்லும் வழியில் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்களில் வழிபாடுகள் நடத்தப்படும். அன்றைய தினத்தில் மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், நேசத்தை வெளிப்படுத்தக்கூடிய பேரணிகள் நடத்தப்படும். அனைத்து மதங்களும் சமமானவை. எனவே, இந்த பேரணிகளில் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொள்வார்கள்.
தேர்தலை கருத்தில் கொண்டு அவசர அவசரமாக ராமர் கோவில் திறப்பு விழாவை நடத்துகிறார்கள். ஆனால், பிற மதங்கள் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே பாகுபாடு காட்டப்படுவதை அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினார்.