ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நிர்மலாதேவியை அழைத்துவந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள், ஃபோட்டோகிராபர்கள் மற்றும் சேனல் செய்தியாளர்களைப் பணியாற்ற விடாமல், அராஜகத் தாக்குதல் நடத்தியது காவல்துறை.
நக்கீரன் நிருபர் ராமகிருஷ்ணன், தினகரன் நிருபர் ராகுல், தந்தி டிவி நிருபர் செந்தில், ராஜ் டிவி நிருபர் கார்த்திக் ஆகியோரிடம் நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர். இதன் உச்சக்கட்டமாக சன் டிவி நிருபர் மணிகண்டன் காவல்துறையினரின் கடும் தாக்குதலுக்கு ஆளானதால், அவரது வலதுகை புஜம் இறங்கிவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
செய்தியாளர் மணிகண்டன், சின்னதுரை என்ற போலீஸ்காரர் மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் மனு ரசீது தரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.
கண்மூடித்தனமாக செய்தியாளர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது புகார் பதிவானதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராசன், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார்.
அடுத்தகட்டமாக விருதுநகர் மாவட்ட செய்தியாளர்கள், நடந்த அராஜகத்தை ஆதாரங்களுடன், மாநில மனித உரிமை கமிஷனுக்கு புகாராக அனுப்புவதென்று முடிவெடுத்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைத் தாக்கிய காவல்துறையினருக்கு எதிராக, தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன.