இன்று மாலையிலிருந்தே காவேரி மருத்துவமனை சுற்றுவட்டாரம் சற்று பதற்றமாகவே இருந்தது. ஸ்டாலின், அழகிரி இருவரும் மருத்துவமனைக்கு வந்தனர். மதியம் தயாளு அம்மாள் வருகை தந்தார். இத்தனை நாட்களில் கலைஞரைப் பார்க்க தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தது இன்றுதான் முதல் முறை. ஒரு புறம் இது மகிழ்ச்சியென்றாலும் மறுபுறம் கவலையை உண்டாக்கியது. என்னவோ ஏதோ என்று மருத்துவமனையை சுற்றி இருந்த தொண்டர்கள் கவலைப்பட, உடல்நிலை கவலைக்கிடம் என்று ஒரு செய்தி பரவி, மீண்டும் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் காவேரி மருத்துவமனையை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் 'கலைஞரின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது அங்கிருந்தவர்கள் மட்டுமல்லாது வெளியிலும் கவலையை உண்டாக்கியது. திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வந்தார். கலைஞர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற தொடங்கியதிலிருந்து பல்வேறு கட்சி தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் வந்து நலம் விசாரித்தனர். ஆனால், திமுகவின் எம்.எல்.ஏக்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் பெருமளவில் வந்தால் அது மருத்துவமனைக்கும் சற்று சங்கடம் என்பதால், தலைமை அவர்கள் வருவதை ஊக்குவிக்காமல் இருந்தது. திமுகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் மட்டுமே வந்து சென்றனர். பொன்முடியும் எ.வ.வேலுவும் மருத்துவமனையிலேயே ஒரு அறை எடுத்து தங்கியிருந்தனர். ஆரம்பத்தில் அங்கிருந்த அழகிரி. கலைஞர் உடல்நிலை தேறியவுடன் கிளம்பிச் சென்றார். ஸ்டாலினும் சில நாட்களுக்கு முன்பு கட்சி அலுவல்களை மெல்ல கவனிக்கத் தொடங்கினார்.
இப்படியிருந்த சூழ்நிலையில் இன்று மாலை காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானது. கலைஞர் உடல்நிலை குறித்து விளக்கிய அந்த அறிக்கையில் இதுவரை இல்லாத வகையில் கலைஞரின் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர். தொண்டர்கள் மத்தியிலும் பிற கட்சி தலைவர்கள் மத்தியிலும் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் ஒரு பதற்றம் பற்றியிருக்கிறது. கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்துள்ளனர். இதுவரை வராத எம்.எல்.ஏக்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் வந்து கொண்டிருக்கின்றனர். பொன்முடி, எ.வ.வேலு உள்பட சில முன்னாள் அமைச்சர்களின் குடும்பத்தினரும் வந்துள்ளனர். கலைஞரின் பாதுகாவலர்களாக இருந்த, இருக்கும் அதிகாரிகள், உதவியாளர் சண்முகநாதன், என பலரும் வந்திருக்கின்றனர். தொண்டர் கூட்டம் "எழுந்து வா தலைவா" என்று கோஷமிட்டு வருகிறது. தேமுதிகவிலிருந்து இதுவரை யாரும் வந்து பார்க்காத நிலையில் இன்று அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவரும் அக்கட்சி தலைவர் விஜயகாந்த்தின் மைத்துனருமான சுதீஷ் வந்து சென்றார். உடன் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் வந்தார்.
நேரமாக ஆக, கூட்டம் கூடிக்கொண்டே இருக்கிறது. வராதவர்களெல்லாம் வந்துகொண்டிருக்கிறார்கள். கலைஞர் மீண்டு வரவேண்டும் என்று நின்று கொண்டிருக்கிரார்கள்.