திருச்சி மாவட்டம், தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில், துவாக்குடிக்கு அருகில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை பின்தொடர்ந்து விரட்டி சென்று காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உஷா என்ற கர்ப்பிணி பெண் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இதையடுத்து, சம்பவத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளரை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கர்ப்பிணிப்பெண் மரணத்துக்கு காரணமான துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யும் நோக்கத்தோடு விபத்தை ஏற்படுத்துதல், தனி மனிதருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் காமராஜ் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் காமராஜை சஸ்பெண்ட் செய்து, மத்திய மண்டல ஐ.ஜி., வரதராஜூலு உத்தரவிட்டுள்ளார். ஆனால், காமராஜை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருவெறும்பூரில் பெண் உஷா உயிரிழப்பு சம்பவம் பற்றி நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வதாமன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அப்போது, கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், போலீஸாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது, என்றும் இந்த சம்பவம் கிரிமினல் குற்றத்துக்கு சமமானது என்று கூறியுள்ளார்.