1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவின் தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர் நாதுராம் கோட்சே. இந்துமகா சபையின் முன்னாள் உறுப்பினராக இருந்த அவர், இந்துத்வா குழுக்களோடு இணைந்து இந்தப் படுகொலையை நிகழ்த்தியதாக வரலாறு சொல்கிறது.
காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை இந்திய மக்கள் தேசிய தியாகிகள் தினமாக அனுசரிக்கின்றனர். ஆனால், இந்து மகா சபை போன்ற இந்துத்வா குழுக்களைச் சேர்ந்தவர்கள், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமானவர் எனக்கூறி அவரைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடுகின்றனர். அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நடந்திருக்கிறது. ஆனால், இது முந்தைய சம்பவங்களையெல்லாம் விட மாறுபட்டு, பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் இந்து மகா சபை அலுவலகம் இருக்கிறது. இங்கு மகாத்மா காந்தியின் உருவபொம்மையை செய்து வைத்திருக்கின்றனர். இந்த அமைப்பின் தலைவரான பூஜா சகுன் பாண்டே ஒரு பொம்மைத் துப்பாக்கியைக் கொண்டு அந்த பொம்மையை சுடுகிறார். அவர் சுட்டதும் ரத்தம் போன்ற திரவம் காந்தி பொம்மையின் வயிற்றிலிருந்து சிதறி ஓடுகிறது. இதைப் பார்த்து சுற்றியிருப்பவர்கள் உற்சாகமாக கூச்சலிடுகின்றனர். பின்னர் பூஜா சகுன் காந்தி கொல்லப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்விக்கிறார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னர் பலமுறை காந்தியின் நினைவு தினத்தன்று இந்து மகா சபையினர் கோட்சே சிலைக்கு மாலை அணிவிப்பதும், இனிப்பு தருவதும் வழக்கமாக இருந்து வந்தது. தற்போது, மகாத்மா காந்தியின் பொம்மையை துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.