தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 166 மையங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு முதல்கட்டமாக மருத்துவர்கள், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கி இரண்டாம் நாளாக இன்றும் நடைபெற்றது. இதனை நேரில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வுக்குப் பின்னர் தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு போடக்கூடிய அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. முதலாவதாக ஒவ்வொருவருடைய விருப்பத்திற்கு இணங்க அவர்களே முன்வந்து இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு ஒப்புக்கொண்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 3126 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று திருச்சியில் அரசு மருத்துவமனையில் நானும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டேன். மேலும் நமக்கு சுமார் 5 லட்சம் ஊசி மருந்துகள் மட்டுமே தற்போது முதல் கட்டமாக வந்து சேர்ந்துள்ளன. ஆனால் பதிவு செய்திருப்பவர்கள் எண்ணிக்கை சற்று கூடுதலாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொருவருடைய முன்மொழிவைக் கொண்டு அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் நூறு பேரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 110 பேரும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர். மற்ற இடங்களிலெல்லாம் 100 பேருக்கு குறைவாக இதனைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த தடுப்பூசி என்பது மிகவும் பாதுகாப்பானது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மூலம் அது உறுதி செய்யப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு வந்திருக்கக்கூடிய இந்தத் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. இங்கு அனைவருக்கும் தடுப்பூசி என்பது கட்டாயம் தேவை. எனவே இதில் பாதுகாப்பு என்பது நூறு சதவீதம் உள்ளது. தொடர்ந்து கரோனா தடுப்பு பணிகளும், தடுப்பூசி போடும் பணிகளும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை கொடுப்பது என எல்லா பணிகளையும் மருத்துவர்களும் செவிலியர்களும் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார். மேலும், இந்த தடுப்பூசி போடும் பணி என்பது அவசர அவசரமாகச் செயல்படுத்தும் திட்டமல்ல. டெஸ்ட் மேட்ச் போல் நிறுத்தி நிதானமாக ஒவ்வொருவருடைய மனநிலைக்கும் உடல் நிலைக்கும் ஏற்றவாறு இந்த தடுப்பூசிகளைப் போடுவது கட்டாயமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.