மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்லும் ஆளுநர், பல திட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில்,
மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்த ஆளுநருக்கு உரிமை உள்ளது. தமிழக அரசின் எந்த துறையையும் ஆளுநர் இதுவரை விமர்சனம் செய்தது கிடையாது. மக்கள் நலனுக்காக இது போன்ற ஆய்வு தொடரும்.
ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டத்தில் இடம் உள்ளது. அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், மாநில அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் கடமையும் ஆளுநருக்கு உள்ளது. இவ்வாறு ஆளநர் மாளிகை அளித்த அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.