கடலூர் மத்திய மாவட்ட அதிமுக அலுவலகம் கடலூர் பாதிரி குப்பத்தில் உள்ளது. இந்தநிலையில் குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளராக கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி அறிவிக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு வேட்பாளர் மாற்றப்பட்டு பரங்கிப்பேட்டையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்திற்கு குறிஞ்சிபாடி தொகுதிக்கு சீட் வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கும்பலாக கடலூர் அதிமுக அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த கார்கள் மற்றும் அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தனர். பின்னர் அமைச்சர் சம்பத்தின் தேர்தல் பிரச்சார வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். அப்போது முதல் தளத்தில் அமைச்சர் சம்பத்தின் மகன் பிரவீன் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுகொண்டு இருந்த்து.
இதனையடுத்து அதிமுவினர் சிலர் அமைச்சர் சம்பத்தின் மகன் பிரவினை பத்திரமாக மேல் மாடிக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் பழனிச்சாமி ஆதரவாளர்களை துரத்தி சென்று தாக்கினர்.
இதில் பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கார்கள் உடைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினர் மீதும் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். இதனையெடுத்து அதிமுக அலுவலகத்தை சுற்றி முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.