இந்திய அளவில் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்து, அவர்களின் கட்சியைத் தேர்தலில் வெற்றிபெற வைக்கும் வியூக வகுப்பாளராக அறியப்பட்டவர் பிரசாந்த் கிஷோர். இதற்காக, ஐ-பேக் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் திமுகவை வெற்றிபெற வைப்பதற்காக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்திடம், ஒரு வருடத்திற்கு முன்பு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது திமுக தலைமை! சுமார் 350 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் போடப்பட்ட ஒப்பந்தம் அது என்பது எல்லோரும் அறிந்த சங்கதிதான்.
திமுகவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியுடனும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார் பிரசாந்த் கிஷோர். “மம்தாவின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸை மீண்டும் ஆட்சி அரியணையில் அமர்த்துவேன்; பாஜகவை வீழ்த்துவதே என் வேலை” என்கிற சபதத்துடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பிரசாந்த். கடந்த 1 வருடமாக திரிணாமுல் காங்கிரசுக்கான வியூகத்தை வகுத்து தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது வியூகத்தை உடைத்து, மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்ற அனைத்து வியூகங்களையும் செய்து வருகிறது பாஜக தலைமை! பாஜகவின் வெற்றிக்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில், மேற்கு வங்க தேர்தல் பணிகளை ஒப்படைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இதனால் மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்தபடியே இருக்கிறது.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள பிரசாந்த் கிஷோர், “மேற்கு வங்கத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், என் தொழிலையே விட்டுவிடுகிறேன். ஐ-பேக் நிறுவனத்திலிருந்தும் வெளியேறி விடுகிறேன்” என சவால் விட்டுப் பேசியுள்ள அவர், “திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுத்து, அவர்களைப் பாஜகவில் சேர்த்துக்கொள்வதும், அவர்களுக்கு ஆசை வார்த்தைகளைச் சொல்லி வலை விரிப்பதும்தான் பாஜக தலைவர்களின் தேர்தல் யுக்தியாக இருக்கிறது. பணத்திற்காகவும் பதவிக்காகவும்தான் சொந்தக் கட்சியிலிருந்து பலர் வெளியேறுகிறார்கள். இதனால் திரிணாமுல் காங்கிரசுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடிப்பது எல்லாம் நடக்காத காரியம். முதலில் அவர்கள் 100 இடங்களில் வெற்றி பெறுவார்களா என பார்ப்போம். அப்படி நடந்தால் என் தொழிலை நான் விட்டுவிடுகிறேன்” என்று சத்தியம் அடிக்காத குறையாக சவால் விடுத்துள்ளார் ஐ-பேக் பிரசாந்த் கிஷோர். இவருடைய பேட்டி, பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்கின்றன வடக்கே இருந்து கிடைக்கும் தகவல்கள்.