மரம் நடும் திட்டம் என்ற பெயரில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசு பணத்தை கொள்ளையடித்த வனத்துறை அதிகாரிகளின் ஊழல் அம்பலமாகியுள்ளது.
உயிர்-பன்முகத்தன்மை பசுமை பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் அதிகப்படியான மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டத்தை ஜெயலலிதா தலைமையிலான அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தை ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து வனத்துறை செயல்படுத்தியது. இதற்கான நிதியாக ரூ.686 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. சிறிய மற்றும் பெரிய ரக கன்றுகள் என பிரிக்கப்பட்டிருந்த இந்தத் திட்டத்தில் நாற்றாங்காலுக்கு ரூ.11.95ம், மரக்கன்றுகளுக்கு ரூ.19.80ம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறாக ஒதுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மரம் நடுவதில் வனத்துறையினர் இணைந்து ஊழல் நடத்தியுள்ளனர். இதனை ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் பணியில் இருக்கும், ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரிகள் 9 பேரும், ஒரு ஒப்பந்ததாரரும் சிக்கியுள்ளனர். இந்த ஊழலில் ரூ.22 லட்சம் வரை அரசு பணம் கையாடல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் கிருஷ்ணகிரியில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கு விவசாயிகள் நியமித்தது, அவற்றை வாகனங்கள் எடுத்துச் சென்றது என பொய்யான காரணங்களைக் கூறி, பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக போலியான ரசீதுகள் தயாரித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் சிலர் பிடிபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.