Skip to main content

"காவல்துறையினர் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்யப் போவதில்லை" -பால் முகவர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

milk cycle

 

"தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப் போவதில்லை" என பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்குப் பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என அறிவித்துள்ள நிலையில் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களைப் பால் விநியோகம் செய்ய விடாமல் வாகனங்களைப் பறிமுதல் செய்வது, பால் விநியோக மையங்களை, பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என பல இடையூறுகளைக் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

 

இது தொடர்பாக தமிழக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர், ஆணையாளர் ஆகியோரது கவனத்திற்குக் கொண்டு சென்றும் இது வரை எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் இருக்கிறது.

 

எனவே நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

பால் விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்குக் காவல்துறையினரால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை கடைநிலை காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை எவரது வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்யப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub