உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமர் குறித்தும், மகாத்மா காந்தி தாக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை (சரத் பவார் அணி) சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜிதேந்திர அவாத், மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “கடவுள் ராமர் பலருக்கும் பொதுவானவர். பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படுபவர். அவர் நம்மை போலவே உணவுப் பழக்கம் கொண்டவர். ராமர் சைவ உணவுகளை உண்பவர் அல்ல. அவர் அசைவம் உண்பவர். 14 ஆண்டுகளாக காட்டில் வாழ்ந்தவர் எங்கே சென்று சைவ உணவைத் தேடியிருப்பார்?. நமக்கு ராமரை முன் மாதிரியாக காண்பித்து அனைவரையும் சைவம் உண்பவர்களாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.
யார் என்ன சொன்னாலும் மகாத்மா காந்தியாலும், ஜவஹர்லால் நேருவாலும் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. அதை யாராலும் மாற்ற முடியாது. மகாத்மா காந்தி மீது 1935ஆம் ஆண்டில் இருந்து தாக்குதல் முயற்சிகள் நடத்தப்பட்டன. காந்தி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விடுதலை இயக்கத்தின் தலைவராக ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்டவராக இருப்பதால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காந்தியின் கொலைக்கு பின்னால் ஒரே காரணம் சாதிவெறி மட்டும் தான்” என்று பேசினார். ஜிதேந்திர அவாத்தின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.